தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.5.12

கானல் நீராகும் கவுன்சிலிங்


பொது மாறுதல் கலந்தாய்வுக்கு(கவுன்சிலிங்) விண்ணப் பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் கலந்தாய்வு கானல் நீராகி விடுமோ என்ற அச்சம் ஆசிரியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை, தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கோ, அருகில் உள்ள மாவட்டங்களுக்கோ வெளிப்படையாக பொது மாறுதல் மூலம் பணியிட மாற்றம் பெறும் முறை தமிழகத்தில் கடந்த 2002ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்து பல மாதங்கள், ஆண்டுகள் கல்வி அலுவலகத்திற்கு நடையாய் நடந்த ஆசிரியர்கள் மத்தியில் பொது மாறுதல் கலந்தாய்வு மிகுந்த வரவேற்பை பெற்றது. 8 ஆண்டுகள் எந்தவித பிரச்னையும் இன்றி நடந்த கலந்தாய்வுக்கு கடந்த ஆண்டில் சோதனை வந்தது.

தமிழகத்தில் கொண்டு வந்த சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை தமிழக அரசு திடீரென நிறுத்தி வைத்தது. சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி கல்வியாளர்கள் நீதிமன்றம் சென்றதால் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என வழக்கு சென்றது. இதனால் மூன்று மாதங்கள் கடந்தன. இறுதியில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட் டது.

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கிலேயே அரசு கவனம் செலுத்தியதால் கடந்த ஆண்டு கல்வித் துறையில் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆசிரியர்கள் கவுன்சலிங் செப்டம்பர் மாதம் தான் நடத்தப்பட்டது.

இந்த கவுன்சலிங்கும் வெளிப்படையாக இல்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின.

இந்த ஆண்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சலிங்கிற்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளில் பெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 30ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

ஆசிரியர்களிடம் பெற்ற விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கச் சென்ற போது, விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தி வைக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை பொது மாறுதல் விண்ணப்பங்களை அளிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மாறுதல் மூலம் மாறுதல் வாங்கிச் செல்ல திட்டமிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், மே மாதம் இறுதியில் கலந்தாய்வு நடத்தப்பட்டால் ஜூன் தொடக்கத்தில் அவரவர் மாறுதல் பெற்ற பள்ளிகளில் பொறுப்பேற்று முறையான கற்றல், கற்பித்தல் பணியில் ஈடுபட முடியும்.

சென்ற ஆண்டு செப்டம்பரில் பொது மாறுதல் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் மாறுதலில் சென்றதால் கிராமப்புற பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்புகளை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் 10, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டும் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்வு வரை எதிரொலிக்கும்

கடந்த ஆண்டு கலந்தாய்வு தள்ளிப் போனதால் கல்வி ஆண்டு முழுவதுமே கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆசிரியர் பணியிடங்கள் ஒன்று கூட நிரப்பாததால் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணியில் கூட 9ம் வகுப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 10ம் வகுப்பே இல்லாத பள்ளி ஆசிரியர்கள் கூட 10ம் வகுப்பு விடைத்தாளை திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டனர்.

இதனால் மாணவ, மாணவிகளின் எதிர்காலமே பாதிக்கும் சூழ்நிலை உருவானது. இந்த விஷயம் வெளியே கசிந்ததால் தான் 9ம் வகுப்பு ஆசிரியர்கள் அவசர, அவசரமாக தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எனவே கலந்தாய்வை தள்ளிப் போடுவது அனைத்து விஷயங்களிலும் எதிரொலிக்கும்.

முதல் படி கலந்தாய்வு
ஒரு கல்வி ஆண்டிற்கான முதல் தொடக்கமே கலந்தாய்வு தான். மே மாதம் இறுதியில் கலந்தாய்வு நடத்தப்பட்டால் ஜூன் தொடக்கத்தில் மாறுதல் பெற்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் பொறுப்பேற்பர். கடந்த ஆண்டு செப்டம்பரில் பொது மாறுதல் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் மாறுதலில் சென்றதால் கிராமப்புற பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்புகளை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான 900 ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 1054 (710 மற்றும் 344) ஆர்எம்எஸ்ஏ உயர்நிலைப் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரபிபப்படவில்லை.

இவை அனைத்தும் காலி பணியிடங்களாகவே தற்போதும் உள்ளது. எனவே மே இறுதியில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி ஜூன் இறுதிக்குள் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி ஜூலை இறுதிக்குள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே முறையாக கல்வி கற்றல், கற்பித்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட முடியும். இதற்கு முதல்படி பொது மாறுதல் தான்.


இயக்குநர் முதல்...

தமிழகத்தில் கல்வித் துறையை பொறுத்தவரை பள்ளிக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என இயக்குநர் முதல் இடைநிலை ஆசிரியர் வரையிலான பதவி உயர்வு அனைத்தையும் கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே செய்து முடிக்க வேண்டும். இதற்கு ஆரம்பம் பொது மாறுதல் கலந்தாய்வு தான் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

நன்றி:

 தினகரன் 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்