தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.4.12

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு 23ம் தேதி ஆரம்பம்

தமிழகம் முழுவதும், சமூகப் பொருளாதார மற்றும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு, வரும் 23ம் தேதி துவங்குகிறது.

கடந்த 2011ம் ஆண்டில், நாடு முழுவதும் இக்கணக்கெடுப்பை நடத்த, மத்திய அரசு முடிவு செய்தது. அந்தந்த மாநில அரசு, மத்திய அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011, ஜூன் மாதத்திலிருந்து, பல மாநிலங்களில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இது மாதிரியான கணக்கெடுப்பு நடத்தப்படுவது, இதுவே முதல் முறை. இதில் கிடைக்கும் விவரங்களைக் கொண்டு, அதன் அடிப்படையில், பல்வேறு அரசு நலத் திட்டங்களை, சிறப்பாக செயல்படுத்த முடியும் என, அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில்...:
தமிழகத்தில் இக்கணக்கெடுப்பு, வரும் 23ம் தேதி துவங்குகிறது. ஊரகப் பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறை மூலமாகவும்; நகர்ப்பகுதிகளில், நகராட்சி மூலமாகவும், கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பின் மூலம், ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார நிலை, அவர்களின் படிப்பு, வருமானம், ஆகியவை வரிசைப்படுத்தப்படும். இதன்மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பங்களை, சுலபமாக கண்டறியலாம். அத்துடன், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள், எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரத்தையும் அறியலாம்.

கணினி முறை:
இதற்கு முன் நடந்த கணக்கெடுப்புகளில், காகித அட்டவணையை வைத்து, அதில் விவரங்களை எழுதி, அதன்பின் கணினியில் பதிவு செய்வர். இந்த முறை, கணக்கெடுப்பாளருடன், புள்ளி விவரம் பதிவு செய்ய ஒருவர் வருவார். கணக்கெடுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு, மக்கள் அளிக்கும் பதிலை, புள்ளி விவரப் பதிவாளர், சிறிய கணினியில், அந்த இடத்திலேயே பதிவு செய்வார். ஒரு குடும்பத்தில், கணக்கெடுப்பு முடிந்ததும், அவர்களுக்கு ஒப்புகை சீட்டு அளிக்கப்படும். அதில், கணக்கெடுப்பாளர், புள்ளி விவரப் பதிவாளர் மற்றும் குடும்பத்தினரின் கையொப்பம் இடப்படும். கணக்கெடுப்பு முடிந்ததற்கான அறிகுறியாக, அந்த வீட்டில், ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஒவ்வொரு தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், தகவல்களை தொகுத்து, வலைதளத்தில் பதிவு செய்யும் வசதியுடன் கூடிய, தகவல் சேமிப்பு மையம் இயங்கும். இங்கு, சிறிய கணினியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், இணையதளத்தில் பதிவு செய்து அனுப்பப்படும்.

பணியாளர்கள்:
கணக்கெடுப்புப் பணியில், ஊரக வளர்ச்சித் துறைப் பணியாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், நகராட்சிப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியர்களும் ஓரளவிற்கு பயன்படுத்தப்படுவர். கணக்கெடுப்பில் ஈடுபடும் அனைவருக்கும், அடையாள அட்டை மற்றும் நியமன ஆணை வழங்கப்படும்.

சம்பளம்?
கணக்கெடுப்பாளர்களுக்கு, பயிற்சிக்கான படியாக, நாள் ஒன்றுக்கு, 150 ரூபாய் வழங்கப்படும். ஒதுக்கீடு செய்யப்பட்ட பிளாக்குகளில் கணக்கெடுப்பை முடித்து, சுருக்கப் படிவத்தை மேற்பார்வையாளரிடம் சமர்ப்பித்த பின், ஒவ்வொரு கணக்கெடுப்பு பிளாக்கிற்கும், பணி முடித்ததற்கான மதிப்பூதியமாக, தலா 3,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், போக்குவரத்துப் படியாக, நாள் ஒன்றுக்கு, 150 ரூபாய் வழங்கப்படும். 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே, இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கேட்கப்படும் கேள்விகள்:
கணக்கெடுப்பாளர், மாநிலம், மாவட்டம், வட்டாரம், கிராம ஊராட்சி, கிராமம், வார்டு, குடும்பத்தின் வகை, வீட்டுப்பட்டியல், குடும்ப எண், குடும்பத்தில் உள்ளவர்கள் பெயர், குடும்பத் தலைவருக்குள்ள உறவு, பாலினம், பிறந்த தேதி, திருமண நிலை, தந்தை, தாய் பெயர், தொழில், கல்வி நிலை, மாற்றுத் திறனாளிகள், மதம், ஜாதி, வீடு, வேலை மற்றும் வருமானம் சார்ந்தவை, குடியிருப்பில் உள்ள சொத்துகள், சொந்த நிலம், இதர சொத்துகள் போன்ற விவரங்களை கேட்பார். வருமான வரி செலுத்துபவரா, மாதம் சம்பளத்துடன் கூடிய வேலை செய்பவரா, கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவரா, சொந்த வீடா, வாடகை வீடா, இதர வகையைச் சேர்ந்ததா? குடியிருப்பு அறை சுவராக பயன்படுத்தும் பொருள் போன்ற விவரங்களும் சேகரிக்கப்படும். நகரப் பகுதிகளில், விளக்கு ஒளிக்கான பிரதான எரி பொருள், கழிப்பறை, கழிவு நீர் வெளியேற வழி, கணினி, மடிக்கணினி, இணைய வசதி, துவைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி உள்ளதா போன்ற விவரங்கள் கூடுதலாக கேட்கப்படும்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்