தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.3.12

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் "கிளவுடு கம்ப்யூட்டிங்"

 தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான, அரசு துறைகளில், "கிளவுடு கம்ப்யூட்டிங்' முறை சாத்தியமானால், தனியார் நிறுவனங்களை விட, எளிதில் பணிகள் நடக்கும் இடமாக, அரசு அலுவலகங்கள் மாறிவிடும். ஆனால், இந்தத் திட்டத்தை அமலாக்குவது அத்தனை சுலபமல்ல. 

கணினி மயம்
இதுவரை, தொழில் நிறுவனங்களிடையே மட்டுமே பிரபலமாக இருந்த, "கிளவுடு கம்ப்யூட்டிங்' முதல் முறையாக, அரசுத் துறையில் பயன்படுத்தப்பட உள்ளது. இணையம் வசதி, ஒரு துறை சம்பந்தப்பட்ட சேவையை மட்டும் பெறுவது; "கிளவுடு கம்ப்யூட்டிங்' பல்வேறு துறைகளின் வசதிகளையும் பெற்றுத் தர கூடியது. முதலில், சம்பந்தப்பட்ட துறைகளை கணினி மயமாக்க வேண்டும். பிறகு, அனைத்து துறைகளுக்கும், பொதுவான, "சர்வர்' ஒன்று உருவாக்கப்படும். அதில், துறைகளின் சேவை, தகவல், ஆவணங்கள் உள்ளிட்டவை பதியப்படும். அவற்றை, சம்பந்தப்பட்ட துறையினர் மட்டுமின்றி, இணைப்பில் உள்ள பிற துறையினரும் கையாள முடியும்.
 
லாபம் என்ன

 திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு சேவைக்கும் மக்கள், ஒவ்வொரு அலுவலகத்தின் படியேற வேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக, நில உரிமை தொடர்பாக சர்ச்சை வந்தால், பத்திரப்பதிவு அலுவலகம் சென்று, வில்லங்கச் சான்று வாங்கி, அதை தாசில்தாரிடம் காட்ட வேண்டும். "கிளவுடு கம்ப்யூட்டிங்' முறையில், தாசில்தார், அவரது அலுவலகத்திலிருந்தே, வில்லங்கச் சான்றிதழைப் பார்வையிட முடியும் என்பதால், இரண்டு அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, ஒருவர் கடைசியாக கட்டிய வரி; அவர் மீது இருக்கக் கூடிய வழக்குகள்; அவர் பெயரில் உள்ள சொத்துக்கள்; சம்பந்தப்பட்ட நபர், இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என, ஏராளமான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இதனால், நேர விரயம் தவிர்க்கப் படுவதோடு, மக்களுக்கும், அரசுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் எளிதாகும். அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளில், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். 

கனவுத் திட்டம்
இது, முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் மட்டுமல்லாது, ஒரு முன்னோடித் திட்டமும் கூட, ஆன்-லைன் சேவையில், முன்னணியில் உள்ள குஜராத் அரசியலில் கூட, இத்திட்டம் செயல்படுப் படவில்லை. திட்டம் நடைமுறைக்கு வந்தால், பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு வழிகாட்டியாக, தமிழகம் திகழ முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில், தாம் உறுதியாக உள்ளதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அதிபர் ஒருவரிடம், முதல்வர் தெரிவித்துள்ளார். அவருடைய தனிப்பட்ட ஆர்வமும், மேற்பார்வையும் இருப்பதால், இத்திட்டம் நிறைவேறுவது சாத்தியமே.

ஒருங்கிணைப்பு கடினம்
ஆனால், திட்டத்தை நடைமுறைப்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகளின் முழு ஒத்துழைப்பு தேவை. தகவல்களைப் பரிமாறுவதில், துறைகளுக்குள் கருத்து வேறுபாடும், மோதலும் ஏற்படும் என, அஞ்சப்படுகிறது. ஆவணத்தின் ரகசியத் தன்மை போய்விடும்; தங்களின் அதிகாரம் பறிக்கப்படும் என, அலுவலர்கள் பயமுறுத்தலாம். ஆனால், ஒவ்வொரு சேவைக்கும், தங்களுக்கு கிடைத்து வந்த மாமூல் பாதிக்கப்படும் என்ற அச்சமே, உண்மையான காரணம் என, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்போது துவங்கும்
இப்போது தான், திட்டத்துக்கு அடித்தளமே போடப்பட்டுள்ளது. துறைகளின் கணினி மயமாக்கல் முடிந்த பின் தான், "கிளவுடு கம்ப்யூட்டிங்' கொண்டு வர முடியும். அதற்கு எப்படியும், இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 
செய்யப் போவது யார்

மிகப் பெரிய திட்டம் என்பதால், இதை வடிவமைத்து, செயல்படுத்தும் பணி, தனியார் நிறுவனங்களுக்கே கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழக அரசின் மின் ஆளுமை நிறுவனமான, "எல்காட்' அல்லது தேசிய தகவல் மையமான, "நிக்' மூலம், இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான, "கிளவுடு கம்ப்யூட்டிங்' வசதியை, ஏற்கனவே, "இயான்' என்ற பெயரில், டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதில் நிபுணத்துவம் பெற்றது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்