தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.7.11

இதர பிற்படுத்தப்பட்டோர்(OBC) சான்றிதழ் - சம்பளம் மற்றும் விவசாய வருமானம் ஆகியவற்றை ஆண்டு வருமானத்தில் சேர்க்கக் கூடாது

மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் ராவ் தமிழகத்திற்கு வந்து, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அவருடன் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., கார்வேந்தனும், முதல்வரை சந்தித்து பேசிவிட்டு வந்தார். தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் நிலை குறித்து, இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டது. 
 
தமிழகத்தில் 21 ஜாதிகள் மாநில அளவில் பிற்படுபடுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றும் கூட, இன்னமும் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால், இந்த ஜாதிகளைச் சேர்ந்த குழந்தைகள், மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள இயலாமல் தவிக்கின்றனர். இதை மாற்ற வேண்டுமென, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். இந்நிலையில், முதல்வர் வைத்திருந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளும் டில்லியில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய உறுப்பினர் கார்வேந்தன் கூறியதாவது: 
ஏற்கனவே 31 ஜாதிகள், மத்திய அரசு பட்டியலில் இடம் பெறாமல் இருந்தன. இவற்றில் 10 ஜாதிகள் மத்திய பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன. கடந்த 1997-98ம் ஆண்டுகளில் இருந்தே இந்த கோரிக்கை இருந்து வருகிறது. ஆனாலும், என்ன காரணத்தினாலோ இவை இடம்பெறாமல் போய்விட்டன. இந்நிலையில், முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த 21 ஜாதிகளும் விரைவில் மத்திய பட்டியலுக்கு மாற்றப்படும். இதற்குண்டான பணிகள் ஆரம்பமாகிவிட்டன. இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்று கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும். அதுபோல, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் வாக்கில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களை முடித்துக் கொண்டு டில்லிக்கு வந்த பிறகு, ஓரிரு மாதங்களில் 21 ஜாதிகளையும் மத்திய பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும். இதுதவிர, கிரீமிலேயர் பிரச்னை குறித்தும் முதல்வரிடம் பேசினோம்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தாசில்தார் அலுவலகங்களில், பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் இருந்து வருகின்றன. ஆண்டு வருமானமாக கணக்கிடப்படும் தொகையை வைத்து பிரச்னைகள் வெடிக்கின்றன. அதாவது பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க வேண்டுமெனில், ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தவறாக கணக்கில் எடுக்கப்படுகிறது. இதுவே பிரச்னைக்கு காரணம். 

4.5 லட்ச ரூபாய் என்ற ஆண்டு வருமானத்தில், சம்பந்தப்பட்டவரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் ஆகியவற்றை ஆண்டு வருமானத்தில் சேர்க்கக் கூடாது. இதற்கான தெளிவான விதிகள் உள்ளன. சம்பளத்தையும் விவசாய வருமானத்தையும் கூட்டி, ஆண்டு வருமானம் அதிகம் இருப்பதாக காரணம் காட்டி, பல இடங்களில் சான்றிதழ்கள் மறுக்கப்படுகின்றன. இது கூடாது என்றும் விதிமுறைகளை சுட்டிக்காட்டி சுற்றறிக்கை, கடந்த 1991 மற்றும் 2008ம் ஆண்டுகளில் மத்திய அரசு அனுப்பியது. தாசில்தார் அலுவலகங்கள் இதை பின்பற்ற வேண்டும். 

அதேபோல, பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்த ஜனாதிபதி, பிரதமர், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், குரூப் 1 மற்றும் குரூப் 2 அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் கிரீமிலேயர் விதி உள்ளது. ஆனால், ஒரு குரூப் 2 அதிகாரி தன்னுடைய 40 வயதிற்குள் குரூப் 1 அதிகாரியாக மாறவில்லை எனில், அவரது குழந்தைகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என, விதிகள் உள்ளன. 

இந்த நடைமுறைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் முதல்வரை கேட்டுக் கொண்டோம். இவ்வாறு கார்வேந்தன் கூறினார்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்