தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.7.11

சமச்சீர் கல்வி பிரச்னையால் கல்வித் துறையில் பல்வேறு பணிகள் தேக்கம்

சமச்சீர் கல்வி பிரச்னையால் கல்வித் துறையில் பல்வேறு பணிகள் தேக்கம் அடைந்துள்ளாக ஆசிரிய, ஆசிரியைகள் புகார் தெரிவிக்கின்றனர். 

வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பே தமிழகத்தில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு உரிய விதிமுறைகளை வெளியிட்டு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு இடமாறுதல் ஆணைகள் வழங்கப்படும். ஆனால் இந்த கல்வி ஆண்டை பொறுத்தவரை இதுவரை கவுன்சிலிங் நடத்தப்படாததால் ஆசிரிய, ஆசிரியைகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்து சுமார் 3.50 லட்சம் ஆசிரிய, ஆசிரியைகள் காத்திருக்கின்றனர்.

பதவி உயர்வில் சிக்கல்
: மேலும், இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பணி, பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி, முதுகலை ஆசிரியர் பணியில் இருந்து தலைமை ஆசிரியர் பணி உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு பட்டியலை அறிவிப்பதிலும், இதனை நடைமுறைப்படுத்துவதிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக, தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவர். ஆனால் இதுவரை பதவி உயர்வு பட்டியல் அறிவிக்கப்படாததால் இந்த ஆசிரியர்கள் விரக்தி அடைந்தனர். மேலும், சிலர் ஓய்வு பெறுவதற்கு ஒரு சில மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணியிடங்கள் "காலி": கல்வித் துறையில் இணை இயக்குனர்கள், பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதனால் மாவட்ட அளவில் கல்வித் துறையில் பல்வேறு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதிலும் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

ஆசிரியர் பணி எப்போது...: ஏற்கனவே காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வசதியாக கடந்த காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி முடிவடைந்துள்ளது. இவர்களுக்கு இதுவரை நியமன ஆணை வழங்காததால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மொத்தத்தில் பாட புத்தகங்கள் இல்லாத பாட திட்ட முறைகளை மாற்றி கள ஆய்வு என்ற பெயரில் வீண் பயணங்களை மாணவ, மாணவிகளை அழைத்து செல்வதை தவிர்த்து உடனடியாக பாட புத்தகங்களை வழங்கி கல்வித் தரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமச்சீர் கல்வி பிரச்னையால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து கல்வித் துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவும் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்