தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.7.11

சமச்சீர் கல்வி பிரச்னைகளுக்கு காரணம் என்ன?முத்துக்குமரன் குற்றச்சாட்டு


"சமச்சீர் கல்வி தொடர்பாக 109 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, அப்போதைய அரசிடம் வழங்கப்பட்டது. நான் அளித்த அறிக்கையை பார்த்து அமல்படுத்தும் பொறுப்பை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமாரிடம் அப்போதைய அரசு அளித்தது. அவர், அவருடைய பொறுப்பை முழுமையாக செய்யவில்லை. பல பரிந்துரைகளை அரசு ஏற்கவே இல்லை,'' என பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வி... இந்த வார்த்தை, இன்று படித்தவர் முதல் பாமரன் வரை, அனைவரது மத்தியிலும் அனல் பறக்கும் விவாதத்திற்குரிய பொருளாக மாறியுள்ளது. "சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்" என்று தி.மு.க.,வும், "சமச்சீர் கல்வி திட்டத்தை முறையாக, அனைத்து வகைகளிலும் தரமானதாக உருவாக்கவில்லை; அதனால், அந்தப் பணியை தமிழக அரசு செய்கிறது" என்று, ஆளும் அ.தி.மு.க., அரசும் கூறிவருகின்றன.மாணவர்கள் சம்பந்தபட்ட ஒரு பொருள், இன்று அரசியலாகி, பல மட்டங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என, பட்டிமன்றம் நடத்தாத குறையாக, ஆங்காங்கே விவாதம் நடந்து வருகின்றன. 

முந்தைய தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்விக்குழு தலைவராக பொறுப்பேற்று, இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, அப்போதைய அரசுக்கு அறிக்கை தந்தவர் பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன். சமச்சீர் கல்வி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, "தினமலர்" நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

சமச்சீர் கல்வி என்றால் என்ன? 
  • நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அப்போது தான், நாடு முன்னேறும்; நாட்டின் பொருளாதாரம் மேம்படும். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அனைவருக்கும் கல்வி என்ற கருத்தில், அனைவருக்கும் தரமான கல்வி என்ற கருத்தும் இருக்கிறது.அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமெனில், முதலில் அனைத்துப் பள்ளிகளும் தரமானவையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்கினால், மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பார்கள். இதை பொதுப்பள்ளி முறை என்றும், அண்மைப்பள்ளி முறை என்றும் அழைக்கலாம். இது, அனைவருக்கும் தரமான கல்வி என்ற கருத்துக்குள் அடங்குகிறது. இந்த நிலையைத் தான் சமச்சீர் கல்வி என்கிறோம்.
சமச்சீர் கல்வி திட்டத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்னைகளுக்கு என்ன காரணம்; யார் காரணம்? 
  • அனைத்து வகை பிரச்னைகளுக்கும் அரசு தலையீடுகள் தான் காரணம். சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டு விட்டது என்றால், அதை செயல்படுத்துபவர்களுக்கு அரசு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைக்கக் கூடாது. திட்டத்தின் செயல்பாடுகள், முடிவுகள் குறித்து ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, திட்டத்தை செயல்படுத்துபவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அரசு கூறலாம். அதைவிட்டுவிட்டு, திட்ட செயல்பாட்டின் சுதந்திரத்தில் தலையிடுவது தான், பிரச்னைகளுக்கு காரணம்.
 சமச்சீர் கல்வி திட்டம் இன்று அனைவர் மத்தியிலும் விவாதத்திற்குரிய பொருளாக மாறியுள்ளதைப் பற்றி...
  • இதை வரவேற்கிறேன். 
  • சமச்சீர் கல்வி திட்டத்தைப் பற்றி மக்கள் முழுமையாக புரிந்துகொள்வதற்கு, தற்போதைய சூழ்நிலை ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இத்திட்டத்தில், மக்களின் பங்கு அதிகம் என்றும், அதன் அவசியத்தைப் பற்றியும் எனது பரிந்துரை அறிக்கையில் விரிவாக கூறியுள்ளேன். 109 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, அப்போதைய அரசிடம் வழங்கப்பட்டது. அதில், எத்தனை பரிந்துரைகளை அப்போதைய அரசு ஏற்றது; எத்தனை பரிந்துரைகளை ஏற்கவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்தது தான்.
  • நான் அளித்த அறிக்கையை பார்த்து அமல்படுத்தும் பொறுப்பை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமாரிடம் அப்போதைய அரசு அளித்தது. அவர், அவருடைய பொறுப்பை முழுமையாக செய்யவில்லை என்பதை, பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் பார்த்து நான் தெரிந்து கொண்டேன். 
    • சமச்சீர் கல்வி திட்டம் என்பது திடீரென வந்துவிடவில்லை. இதை ஏதோ பிச்சை போடுவது போல் நினைக்கக் கூடாது. 50களிலேயே கூறப்பட்டுவிட்டது. அனைவருக்கும் தரமான கல்வி என்பது, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. அதை இப்போது தான் அமல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
    • கல்வித் திட்டங்களை அமல்படுத்த, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தியபின், அதன் அன்றாட செயல்பாடுகளில் அரசு தலையிடக்கூடாது. ஆனால், எதற்கெடுத்தாலும் அரசு மூக்கை நுழைப்பது இங்கே நடக்கிறது. இதுதான் பிரச்னைகளுக்கு காரணம். 
    -ஏ.சங்கரன்-

    நன்றி


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக


    பிரபலமான இடுகைகள்

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்