தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.7.11

சமச்சீர் கல்வி விவகாரம்: இடைபருவ, காலாண்டு தேர்வுகள் நடப்பதில் கேள்விக்குறி

சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக இடைநிலை, காலாண்டு தேர்வுகள் நடப்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

பாட புத்தகங்கள் தட்டுப்பாட்டால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சமச்சீர் கல்வி விவகாரம் ஓரளவு முடிவுக்கு வந்த நிலையில் பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்குவதில் தொடர்ந்து தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பழைய பாட திட்டம், சமச்சீர் கல்வி திட்டம் பாட புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயாராக இருந்தும் எந்த புத்தகங்களையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் "ஹாயாக' உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2: இதில் குறிப்பாக, எஸ்.எஸ்.எல்.சி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. பொது பாட திட்டமாக இருந்தும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு போதுமான புத்தகங்கள் வழங்காத நிலையில் இந்த மாணவர்கள் பொது தேர்வில் அதிக மார்க்குகளை பெறுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் பொதுவாக ஜூன் மாதம் முதல் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடர்ந்து ஜூலை மாத இறுதிக்குள் இடைநிலை தேர்வுகளும், ஆகஸ்ட் மாத கடைசியில் கால் இறுதி தேர்வுகளும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி பிரச்னை தொடர்பாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன.தொடர்ந்து பிரச்னை இழுபறியில் நீடித்து கொண்டிருக்க இதுவரை எந்த பாட புத்தகங்களையும் மாணவ, மாணவிகள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இடைநிலை தேர்வுகள், கால் இறுதி தேர்வுகள் உரிய முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாட புத்தகங்கள் இல்லாத நிலையில் மாதாந்திர தேர்வுகளும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புத்தகங்கள் தட்டுப்பாடு: நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு முற்றிலுமாக வரலாறு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. தாவரவியல், விலங்கியல் பாட பிரிவு புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாட பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய பாட புத்தகங்கள் இல்லாததால் பிளஸ் 2 பொது தேர்வை சந்தித்து அதிக மார்க்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பணியிடங்கள் "அம்போ':மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர், நெல்லை கல்வி மாவட்ட அலுவலர், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளது.கல்வித் தரம் பாதிக்கும்:இதனை பொறுப்பு அலுவலர்கள் கவனிப்பதால் பல்வேறு பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொறுப்பு உதவி தலைமை ஆசிரியர்கள் தங்கள் இஷ்டம் போல் செயல்படுவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் இல்லாத சூழ்நிலையில் பல்வேறு ஆசிரிய, ஆசிரியைகளும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படாத நிலையில் தொடர்ந்து கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.

நிர்வாகிகள் ஆவேசம்: இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சேதுராஜ், செயலாளர் மனோகரன், மாநில துணைத் தலைவர் அய்யாதுரை, மாவட்ட அமைப்பு செயலாளர் மாரியப்பன் கூறும் போது, ""தமிழகத்தில் உடனடியாக சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தி பாட புத்தகங்களை விரைந்து வழங்கி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். கடந்த 2 மாதங்களாக பாட புத்தகங்கள் இல்லாத சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரிய, ஆசிரியைகளும் பாடங்களை கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாதங்கள் மட்டுமே இக்கல்வி ஆண்டிற்கான ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் பொதுவாக அடிப்படை கல்வியை கற்றுத் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வுகளும் நடத்தவில்லை. மாணவர்கள், பெற்றோர்கள் நலன் கருதி உடனடியாக சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தி பாட புத்தகங்களை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்