தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.9.17

ஜாக்டோ - ஜியோ இன்று ஆலோசனை

அடுத்த கட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு, மதுரையில், இன்று கூடி முடிவு எடுக்கிறது.

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், செப்., 7 முதல், 15 வரை தொடர் வேலை நிறுத்தம் நடந்தது.
 பின், உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த வழக்கில், நேற்று அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். இதையடுத்து, அக்., 23க்கு, வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டம், இன்று பிற்பகல், 3:00 மணிக்கு, மதுரையில் நடக்கிறது. அதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, முடிவு எடுக்கப்படுகிறது.

ஊதியக் குழு: ஐகோர்ட் கெடு; ஆஜரானார் தலைமை செயலர்


தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நேற்று ஆஜரானார்.

'வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது. அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை, நிறுத்தி வைக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்தை ஈடு செய்ய, சனிக்கிழமை விடுமுறை நாட்களில் பணிபுரிய வேண்டும்.

'சம்பளக் கமிஷன் பரிந்துரையை, செப்., 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நடைமுறை படுத்துவது குறித்து, அக்., 13க்குள் முடிவை தெரிவிக்க வேண்டும்' என, அரசுக்கு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

தமிழகத்தில், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ,- ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 7ல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கினர்.உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அடுத்து, செப்., 15ல் வேலை நிறுத்தத்தை கைவிட்ட அரசு ஊழியர்கள், அன்று மதியம், 2:00 மணிக்கு பணிக்குத் திரும்பினர்.

நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன், நேற்று இவ்வழக்கு, விசாரணைக்கு வந்தது.
தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ் ஆஜராயினர்.

சங்கங்கள் சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாத்: அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏழாவது சம்பளக் குழுவின் திருத்தப்பட்ட சம்பளத்தை, அமல்படுத்த வேண்டும்.
அதுவரை, இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். இதற்காகவே போராடினர்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், 3,800 பேரிடம், சம்பளத்தில்தலா, 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. அரசும், தன் பங்காக, 10 சதவீதம் செலுத்தியது. அவர்கள் ஓய்வு பெற்றும், பலன்களை வழங்கவில்லை. பிடித்தம் செய்த தொகை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அப்பணத்தை வழங்காததால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன்: தற்போது, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, துறைகள் வாரியாக கருத்துக் கேட்பு நடக்கிறது. செப்., 30ல் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பொருளாதார சூழ்நிலையை கருதி, அதை நடைமுறைப்படுத்த, நான்கு முதல் ஐந்து மாதங்களாகும். அதுவரை, இடைக்கால நிவாரணம் குறித்து, உறுதியாக கூற முடியாது. இந்தியாவில், தமிழகத்தில் தான் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள். காலமுறை சம்பளத்தில் கொண்டுவர இயலாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை மேற்கு வங்கம், திரிபுரா தவிர, பிற மாநிலங்கள் ஏற்று கொண்டுள்ளன.

பிரசாத்: கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், அரசு காலம் தாழ்த்துகிறது. ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம்,50 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, உடனடியாக அமல் படுத்தப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது.

விஜய் நாராயணன்: எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வை, இவ்விவகாரத்துடன் ஒப்பிட தேவை இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன், சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டும், உறுதிமொழியை மீறி, 20 சதவீதம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். பெரும்பாலான ஊழியர்கள், அரசுக்கு ஆதரவளித்தனர்.

ஓய்வூதியத் திட்டம் தொடர்பான குழுவானது, நிபுணர்களிடம் கருத்துக் கோர வேண்டி உள்ளது. நவ., 30க்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதிகள்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது. பிடித்து இருந்தால், அதை திருப்பி வழங்க வேண்டும். அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்தை ஈடு செய்ய, வார விடுமுறையான சனிக்கிழமைகளில் பணிபுரிய வேண்டும். சம்பளக் கமிஷன் பரிந்துரையை, செப்.,30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நடைமுறை படுத்துவது குறித்து, அக்., 13க்குள் அரசு முடிவை தெரிவிக்க வேண்டும்.

இதில், கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வூதியத் திட்டம் தொடர்பான குழு, எப்போது அறிக்கைசமர்ப்பிக்கும் என்பதை, அரசு தெரிவிக்க வேண்டும்.

விசாரணை, அக்., 23க்கு ஒத்திவைக்கபடுகிறது. இவ்வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிப்பதா, இல்லையா என்பது குறித்து, இருதரப்பிலும் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.17.9.17

உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து போராட்டம் தொடர்பாக முடிவெடுப்போம்: ஜாக்டோ - ஜியோ

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று ஜாக்டோ- ஜியோ உயர்நிலை குழு கூட்டத்திற்கு பின், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்டம்பர் 7ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்தனர். அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று பிற்பகலில் ஜாக்டோ - ஜியோ உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், மாயவன் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:

நியாயமான 4 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். செப்டம்பர் 21ம் தேதி, போராட்டத்துக்கான தீர்வுடன் ஆஜராகுமாறு தலைமை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்போது அரசின் அடக்குமுறை, மிரட்டல் தொடர்பாக முறையிடுவோம். அதில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும்பட்சத்தில் போராட்டத்தை கைவிட்டு பணிகளை தொடருவோம்.

எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 22ம்தேதி மதுரையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுப்போம்.

ஒவ்வொரு முறையும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும்போது அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. சம்பளத்தை இழந்துதான், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 தாசில்தார்களை, மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த உத்தரவை கலெக்டர் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

நீதிமன்றத்தில் ஆஜரானபோது கேட்கப்பட்ட கேள்விகள், அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் தொடர்பான விளக்க கூட்டம் செப்டம்பர் 19ம் தேதி எல்லா மாவட்டங்களிலும் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
.

16.9.17

ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது

உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடுகிறது.

சென்னை எழிலகம் வளாகத்தில் 5-வது நாளாக நேற்று போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தபடி போராட்டத்தை ஒத்தி வைத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் போராட்டத்துக்கு நாங்கள் காரணம் அல்ல, அரசு தான் முழு காரணம். அரசு எங்களை 14 ஆண்டுகாலம் அலைக்கழித்து இருக்கிறது என்று தெரிவித்தனர்.

இறுதியாக, நீங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள், உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் துணைபுரிகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். போராட்டத்தை நிறுத்த முடியாது என்று நிர்வாகிகள் கூறினர்.

முதல் வெற்றி

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை 21-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக சொல்லி, அவரிடம் உங்களுடைய கோரிக்கை சம்பந்தமாக தமிழக அரசு என்ன முடிவு எடுத்து இருக்கிறது? என்று கேட்போம். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு எங்களுடைய நிர்வாகிகள், போராட்டத்தை கைவிட முடியாது. 21-ந்தேதி தலைமைச் செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி என்ன சொல்கிறார் என்று தெரியும் வரை கோர்ட்டு மீது வைத்துள்ள நம்பிக்கையின்படி, தற்காலிகமாக எங்களுடைய போராட்டத்தை நிறுத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர். அந்த அடிப்படையில் நாங்கள் போராட்டத்தை 21-ந் தேதி வரை ஒத்திவைத்து பணிக்கு செல்கிறோம். எங்கள் கோரிக்கைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.

உயர்மட்டக்குழு கூடுகிறது

இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடுகிறது. அதில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்பது குறித்து முடிவு எடுப்போம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது.

அவைகளை அந்தந்த துறை வாபஸ் பெறுவது தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: உயர்நீதி மன்றம் கேள்வி

'அரசு ஊழியர்களுக்கான, புதிய ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டதா; இல்லையென்றால், எப்போது செலுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை, உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டித்தார். ஆசிரியர்களின் சம்பள விகிதம், அரசு தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும், நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் பற்றி பதிலளித்தார். 3௦ ஆண்டுகள் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு, 91 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி கிருபாகரன், ''புதிய ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும் என்பது நியாயமானது; ஆனால், போராடும் விதம் தான் சரியல்ல; பங்களிப்பு தொகையை வழங்காத, அரசின் நடவடிக்கையும் தவறு தான்,'' என்றார்.

பின், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

அரசு பணியில், 2003ம் ஆண்டுக்கு பின் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின்படி, அரசு ஊழியரும், அரசும், சம அளவு தொகையை செலுத்த வேண்டும். அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டாலும், அதற்கு சமமான தொகையை, அரசு தரப்பில் செலுத்தவில்லை என, கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றும், பலருக்கு, 'பென்ஷன்' தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. 'இந்த பிரச்னை குறித்து, நிதித்துறை தான் சரியான பதிலளிக்க முடியும்' என, கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி தெரிவித்தார். எனவே, நிதித்துறை முதன்மை செயலரை, வழக்கில் சேர்க்கிறேன். அவர் சார்பில், கூடுதல் பிளீடர், 'நோட்டீஸ்' பெற்றுக் கொள்வார்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு, அரசிடம் இருந்து விளக்கம் பெற வேண்டும்.
* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர் சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கு இணையாக, அரசும் செலுத்துகிறதா?

* அரசு தரப்பில் பங்களிப்பு தொகையை செலுத்தவில்லை என்றால், அதை செலுத்துவதற்கு, எவ்வளவு அவகாசம் வேண்டும்?

* ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலருக்கு, பங்களிப்பு பென்ஷன் தொகை வழங்கப்படவில்லை என்பது உண்மையா?

* வழங்கப்படவில்லை என்றால், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எப்போது வழங்கப்படும்?

* அரசு தரப்பில் தவறு இருந்தால், அதற்கான காரணம் என்ன?

ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும், ஏழை மாணவர்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதால், ஆசிரியர்களின் போராட்டத்தை, இந்த நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. அரசு தரப்பில், வரும், 18ம் தேதி, பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சமூக வலைதள விமர்சனம் நீதிபதி கடும் கண்டனம்:
ஆசிரியர்கள் போராட்டம் குறித்து, உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள்குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறாக, ஆபாசமாக விமர்சிக்கப்படுவது பற்றி, செந்தில்குமார், சூரியபிரகாசம், ஞானசேகரன், ஜி.சங்கரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றத்தின் மாண்பு, கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதால், இவ்வாறு செய்திகளை பரப்புவதற்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனவும் கோரினர்.

அதற்கு, நீதிபதி கிருபாகரன், விமர்சனங்கள் குறித்த செய்தி விபரங்களை தாக்கல் செய்தால், அதை ஆராய்ந்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பதாக கூறினார்.

இதுகுறித்து, நீதிபதி கிருபாகரன் மேலும் கூறியதாவது:

எந்த உத்தரவை, நீதிமன்றம் பிறப்பித்தாலும், அதை விமர்சிப்பதற்கு என்றே சிலர் உள்ளனர்; நீதிமன்ற உத்தரவு பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல், 'டிவி' விவாதங்களில் பங்கேற்பவர்கள் விமர்சிக்கின்றனர். சமூகத்தில் அது, எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் பேசுகின்றனர். பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், ஒரு நீதிபதி உத்தரவு பிறப்பிக்கிறார். உடனே, நீதிபதியும், அந்தப் பெண்ணும், ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என, கூறுகின்றனர்.

வாகனங்களை ஓட்டுபவர்கள், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேணடும் என, உத்தரவிட்ட போது, ஏராளமான கடிதங்கள் வந்தன. அவற்றில், 20சதவீதம் ஆதரவு தெரிவித்தும், 80 சதவீதம் எதிர்ப்பு தெரிவித்தும் இருந்தன. கடிதங்களில், அந்த அளவுக்கு வசைகள் இருந்தன. என் அப்பா, அம்மா, ஆசிரியர்கள் கூட, இப்படி திட்டியதில்லை. இரு சக்கர வாகனம் ஓட்ட தெரியுமா; பள்ளமான சாலையில், மனைவியுடன், வாகனத்தில் சென்றது உண்டா எனவும் கேட்கின்றனர்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு; உயர்நிதி மன்ற தீர்ப்பு முழு விவரம்

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையால், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் உத்தரவாதம் அளித்தன. நேற்று மதியம், 2:00 மணி முதல் வேலைக்குத் திரும்பவும், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும், 21ம் தேதி ஆஜராகவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின், காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு தாக்கல் செய்தேன். செப்., 7ல் நீதிபதிகள், 'வேலை நிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.

ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி, தலைமைச் செயலர் அறிவிப்பு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அவமதிப்பு வழக்கு:
மனுவை, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, நேற்று காலை, 10:45 மணிக்கு விசாரித்தது. அவமதிப்பு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாஸ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தலைவர் மோசஸ் ஆகியோர் ஆஜராகினர்.

ஜாக்டோ - ஜியோ தாக்கல் செய்த மனு:
நீதிமன்ற உத்தரவை மீறுவதோ, அவமதிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள், ஏழு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரதிநிதிகள். எங்களுக்கு, 2006ல், திருத்தப்பட்ட சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. 2016 ஜன., 1 முதல் சம்பளத்தை உயர்த்தியிருக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் உயர்த்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கடந்த, 2016 பிப்ரவரி, 19ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, "மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், உடனடியாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களை, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கொண்டுவர குழு அமைக்கப்படும். குழு பரிந்துரைத்த, நான்கு மாதங்களில் முடிவு செய்யப்படும். தற்காலிக ஊழியர்கள் வரன்முறைப்படுத்தப்படுவர்" என அறிவித்தார்.

இவ்விவகாரத்தில், இதுவரை நடவடிக்கை இல்லை. 2016 மத்தியில், ஏழாவது சம்பளக் கமிஷனின் சம்பள உயர்வு அமல்படுத்தபட்டது.

பேச்சுக்கு அழைப்பு:
தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தவில்லை. அரசுடன் பேச்சு நடந்தது; அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தினோம். 9ம் தேதி, ஈரோட்டில் முதல்வர் முன்னிலையில், பேச்சு நடத்த அழைப்பு வந்தது. அங்கு வெளியில் வந்த ஒரு அமைச்சர், 'இவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளனர்' என, பேட்டியளித்தார். நாங்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இடையூறின்றி போராட்டம் நடத்துகிறோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். என மனுவில் தெரிவித்திருந்தனர்.

நீதிபதிகள்:
சட்ட ரீதியாக தீர்வு காண, இதர வழிகள் உள்ளன. ஏன் போராட்டத்தை கையில் எடுத்துள்ளீர்கள். உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும். வேலைநிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர்வது தவறு. அரசு அலுவலகங்களுக்குள் சமைத்துச் சாப்பிட்டு, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு கூறி, சற்று நேரம் விசாரணையை ஒத்திவைத்தனர்.

மீண்டும் பகல், 11:15 மணிக்கு நீதிபதிகள் விசாரித்தனர்.

சங்கங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்: பொதுக்குழுவை கூட்டி, முடிவெடுக்க அவகாசம் அளிக்க வேண்டும்.

சங்க நிர்வாகிகள்: எங்கள் பிரச்னையையும் கருத்தில் கொள்ளுங்கள்.

நீதிபதிகள்: இது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. முதலில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண நாங்களும் விரும்புகிறோம். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால், தமிழக அரசின் தலைமைச் செயலரை இங்கு வரவழைத்து, உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உதவுகிறோம். வாபஸ் பெறாவிடில், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். கலெக்டர் அலுவலகங்களில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு விவாதம் நடந்ததுபின், சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
போராட்டத்திற்கான அறிவிப்பு, ஜாக்டோ- ஜியோ மூலம் வெளியானது. காலவரையற்ற வேலை நிறுத்தம் மூலம் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை தொடர்கின்றனர்.

அரசு அலுவலகங்களை தனி நபர் சொத்து போல் பாவித்துள்ளனர். அரசு அலுவலகங்களில் காலை, இரவு தங்கி, போராட்டத்தை தொடர எவ்வித உரிமையும் இல்லை. அரசு அலுவலகங்கள் ஒன்றும் ஓய்வறை அல்ல; அது மக்களுக்கான இடம்.

அரசு ஊழியர்கள், மக்களுக்கான அதிபதி போல செயல்படக் கூடாது. கலெக்டர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான இடம். தற்போது, மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் நிவாரணம் கோரி, அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், அரசு அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ஊழியர்கள் கொண்டு வந்துள்ளதால், மக்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

ஊழியர் சங்கங்கங்கள், 'கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும்' என்கின்றன. வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவது குறித்து, பொதுக்குழு கூடி முடிவெடுப்பதாக சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நாங்கள் ஏற்கனவே வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளோம். இந்நிலையில், பொதுக்குழுவை கூட்டி, வாபஸ் பெற வேண்டும் என்ற கேள்வியே கிடையாது. முதலில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

சங்கங்கள் சார்பில், 'வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இதில், நிரந்தரத் தீர்வு தேவை. அதற்காக நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம்' என்கின்றனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'நிரந்தரத் தீர்வு காண, அரசு தேவையான முயற்சிகளைச் செய்தது. ஊழியர்களின் போராட்டத்தால் தீர்வு எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்.

இவ்விவகாரத்தில், அரசின் முடிவை தெளிவுபடுத்தும் வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும் 21ல், இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இக்கால கட்டத்தில், ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரை மற்றும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு முயற்சி எடுத்திருக்க வேண்டும். வேலைநிறுத்தத்தை கைவிட்டு, இன்று(15-09-2017) மதியம், 2:00 மணிக்கு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

14.9.17

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்சன் திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், இவற்றுக்குரிய அகவிலைப்படி (டி.ஏ.) ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை அரசு தன் பங்கிற்கு செலுத்துகிறது. இவ்வாறு சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் வழங்கப்பட்டுவிடும்.

எஞ்சிய 40 சதவீத தொகை பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.

புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

பழைய பென்சன் திட்டப்படி, அரசு ஊழியர் ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர் முழு ஓய்வூதியம் பெறலாம். முழு ஓய்வூதியம் என்பது அவர் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அதற்கு உரிய அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது. 30 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் பணிக்காலத்துக்கு ஏற்ப ஓய்வூதிய தொகை நிர்ணயிக்கப்படும். இதற்கென தனி கணக்கீடு உள்ளது.

புதிய பென்சன் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியத்தொகை கிடைக்கும் என்று வரையறுக்க இயலாது. ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டின் பலனை பொருத்தது. பணிக்கொடை (கிராஜுவிட்டி), சிபிஎப் தொகையில் கடன் மற்றும் முன்பணம் பெறும் வசதி, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு இவை எதுவும் கிடையாது என்பதால்தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பென்சன் திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் திட்டவட்டம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்வது தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் திட்டவட்டமாக கூறினர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. நேற்று அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கினர்.

சென்னையில் சேப்பாக்கம் எழிலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகம் முழுவதும் 7 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு எங்களை பேச்சுக்கு அழைக்கும்வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்றார்.

கைது நடவடிக்கை

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு, கோரிக்கைகளை வலியறுத்தி கோஷமிட்டனர். அங்கேயே சமையல் செய்தனர். இதேபோல, திருப்பூர், நீலகிரியிலும் திரளானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக திருச்சியில் 192 பேர், நாகப்பட்டினத்தில் 350 பேர், தஞ்சாவூரில் 1,100 பேர், திருவாரூரில் 2,500 பேர், பெரம்பலூரில் 142 பேர், அரியலூரில் 238 பேர், கரூரில் 256 பேர், புதுக்கோட்டையில் 477 பேர் என 5,255 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் 300 பெண்கள் உட்பட 800 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மதுரையில் 2 ஆயிரம் பேரும், திண்டுக்கலில் 2 ஆயிரம் பேரும், ராமாநாதபுரத்தில் 800 பேரும், சிவகங்கையில் 3 ஆயிரம் பேரும், தருமபுரியில் 2,500-க்கும் மேற்பட்டோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தேனியில் 454 பெண்கள் உட்பட 674 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியில் 71 பெண் ஊழியர்கள் உட்பட 191 பேர், வேலூரில் 2 ஆயிரம் பேர், திருவண்ணாமலையில் 314 பேர், திருநெல்வேலியில் 450 பேர், தூத்துக்குடியில் 385 பேர், கன்னியாகுமரியில் 280 பேர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.

9.9.17

JACTTO - GEO இன்றைய (09.09.17) கூட்ட முடிவுகள்செப்டம்பர் 11 முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

செப்டம்பர் 11-ம் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில், போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு இன்று கூடி ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்குப் பின்னர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், செப்டம்பர் 11-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

செப்டம்பர் 11-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், செப்டம்பர் 12-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரே மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரே செப்டம்பர் 13-ம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான இடுகைகள்